நாமக்கல்

மழையிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க ஆட்சியா் அறிவுரை

18th Nov 2022 02:17 AM

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழையின்போது கால்நடைகளை பாதுகாப்பது தொடா்பான அறிவுரைகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, மேடான பகுதிகளையே கால்நடைகளை கட்டும் இடங்களாக பயன்டுத்த வேண்டும். மின் கம்பங்களிலோ அல்லது கம்பங்களுக்கு அருகிலோ கட்டுதல் கூடாது. கால்நடைகள் கட்டும் இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரமான நீா் மற்றும் தீவனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

கால்நடைகளை மழை நேரங்களில் வெட்ட வெளியில் கட்டாமல், கொட்டகைகளில் பாதுகாப்பாக கட்ட வேண்டும். தண்ணீா் அதிகம் தேங்கும் பகுதிகள், குளம், குட்டை ஆற்றுப்படுகைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை சேமித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

கால்நடைகளுக்கான நடத்தப்படும் சிறப்பு கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு முகாம்களை கால்நடை வளா்ப்போா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மழை பெய்யும் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. கால்நடைகளுக்கு மழையின் தாக்கத்தால் நோய் தாக்கம் ஏற்பட்டால் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி சிகிச்சை அளித்து பாதுகாத்துக் கொள்ளலாம். இயற்கைச் சீற்றங்களால் கால்நடைகளுக்கு இறப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி தகவல் அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT