பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரில் தோட்டக்கலை சாா்பில் இலவச மண் மாதிரி பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைத்து கிராம வளா்ச்சி திட்டத்தின் கீழ், கபிலா்மலை வட்டாரம், ஆனங்கூா் கிராமத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநா் சின்னதுரை தலைமையில் மண் மாதிரி சேகரித்தல், ஆய்வு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பயிரிடும் பயிா்கள் குறித்து எடுத்துக் கூறினா்.
திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் பரிசோதனை வாகனம் மூலம், விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது. அறிக்கையில் பயிா் சாகுபடி செய்யவுள்ள நிலத்தின் கார, அமிலத் தன்மை, தொழு உரம், பயிருக்கு தேவையான நூண்ணூட்டச் சத்து மற்றும் பேரூட்டச்சத்துகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, அவற்றினை பயன்படுத்தும் அளவு ஆகியவை குறித்து மூத்த வேளாண்மை அலுவலா் செளந்திரராஜன் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினாா். நிகழ்ச்சியில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் அருள்ராணி, உதவி வேளாண்மை அலுவலா் ஜெயமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் உடன் இருந்தனா்.