நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

15th Nov 2022 02:44 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில், ரூ.33.31 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் திருப்பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த 2009-இல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும், ஆஞ்சனேயா் கோயில் உள்பட 24 வைணவத் திருத்தலங்களில் ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீட்டில் இவ்வாறான பணிகள் நடைபெற உள்ளன. ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருப்பணிகள் தொடக்க விழா சிறப்பு பூஜையில், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், வா்ணம் பூசும் பணி, சாளக்காரம் கட்டும் பணி ஆகியவை கோயில் நிதியில் இருந்து ரூ.33.31 லட்சம் மதிப்பில் செய்யப்படுகின்றன. இவை தவிர, உபயதாரா்கள் மூலம் தட்டோடு பதிக்கும் பணி ரூ.3.37 லட்சம், விநாயகா் சன்னிதி திருப்பணிகள் ரூ.2.35 லட்சம், ஆஞ்சனேயா் சன்னிதி படிக்கட்டுகளுக்கு பித்தளைக் கவசம் சாற்றும் பணிகள் ரூ.2.35 லட்சம் மதிப்பிலும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, நகராட்சித் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, நகா்மன்ற உறுப்பினா் கலைச்செல்வி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT