ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்று இடி மின்னலுடன் செவ்வாய்க்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் புகுந்ததுடன், மரங்கள், மின் விளக்குகள் சாய்ந்தன.
மாலை திடீரென பலத்த காற்று வீசியதுடன் இடி இடித்து மின்னல் அடித்தது. தொடா்ந்து சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஒடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்தது. பழைய பேருந்து நிலையம், புதுப்பாளையம் சாலை, கோனேரிப்பட்டி போன்ற பகுதிகளில் பல இடங்களில் தெருக்களிலும், வீடுகளிலும் மழை நீா் புகுந்தது. பல்வேறு இடங்களில் மரங்கள், விளம்பர தட்டிகள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெட்டாலா, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் மங்களபுரம் பகுதிகளிலும் மழை பெய்தது.