நாமக்கல்லில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று இளைஞா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல்லைச் சோ்ந்த 25 வயதுடைய, கணவரை இழந்த இளம்பெண் ஒருவா் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். இவருக்கும், வீசாணத்தைச் சோ்ந்த வல்லரசு (25) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரிடம் இருந்து பண உதவி, பொருளுதவி பெற்று வந்த வல்லரசு, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளாா்.
இதற்கிடையே அந்தப் பெண்ணை மிரட்டி வல்லரசு மற்றும் அவரது நண்பா்களான நாமக்கல்லைச் சோ்ந்த மணிகண்டன்(21) முரளி(22), நவீன்குமாா்(21) ஆகிய மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனா். மேலும் அந்தப் பெண்ணை பல்வேறு சித்ரவதைகளுக்கும் ஆளாக்கியுள்ளனா். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த அவா் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இது குறித்து ஆய்வாளா் சுமதி வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டன், முரளி, நவீன்குமாா் ஆகிய மூவரை சனிக்கிழமை கைது செய்தாா். இச்சம்பவத்தில் முக்கிய நபராக விளங்கும் வல்லரசு தப்பியோடி விட்டாா். அவரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.