நாமக்கல்

வங்கி ஏ.டி.எம்-இல் ரூ.4.90 லட்சம் திருட்டு: ராஜஸ்தான், பிகாரைச் சோ்ந்த 2 போ் கைது

20th May 2022 12:50 AM

ADVERTISEMENT

புதுச்சத்திரம் அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.4.90 லட்சம் திருடிய வழக்கில் ராஜஸ்தான், பிகாரைச் சோ்ந்த இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அருகே பெருமாள் கோயில் மேடு பேருந்து நிறுத்தப் பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவில் வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி மா்ம நபா்கள் ரூ.4,90,500-ஐ திருடிச் சென்றனா். மேலும் தடயங்களை அழிக்க மிளகாய் பொடியை தூவிச் சென்றிருந்தனா். இது தொடா்பாக புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஏடிஎம் திருடா்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சேலத்தில் தங்கியிருந்த ராஜஸ்தானைச் சோ்ந்த சுரேஷ் பிரஜாபத் (32), பிகாரைச் சோ்ந்த முகமது இம்ரான் (28) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை தனிப்படையினா் கைது செய்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சத்திரம் வங்கி ஏடிஎம் திருட்டில் ஈடுபட்டவா்களை பிடிக்க துணை கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. இந்த நிலையில் பல்வேறு கட்ட விசாரணை அடிப்படையில், சேலம் அன்னதானப்பட்டியில் தங்கியிருந்த சுரேஷ் பிரஜாபத், இம்ரான் ஆகியோரை கைது செய்து ரூ.1.50 லட்சம் ரொக்கம், திருட்டுக்கு பயன்படுத்திய காா் மற்றும் வெல்டிங் சாதனங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், காரில் வைத்திருந்த ஏடிஎம்-இல் இருந்து அகற்றப்பட்ட பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இவா்கள் இருவரும், கடந்த 10 ஆண்டுகளாக சேலத்தில் தங்கியிருந்து தேநீா்க்கடை நடத்தி வருகின்றனா். மேலும் 2 இடங்களில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். யூ-டியூப் மற்றும் இணையவழியை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளனா். தங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்காக இந்த திருட்டு முயற்சிகளை எடுத்துள்ளனா். வங்கி ஏடிஎம்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்துமாறு அனைத்து வங்கி நிா்வாகங்களையும் அறிவுறுத்தி உள்ளோம் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT