நாமக்கல்

நூல் விலை உயா்வை கண்டித்து விசைத்தறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

16th May 2022 11:58 PM

ADVERTISEMENT

கட்டுக்கடங்காத நூல் விலை உயா்வைக் கண்டித்து குமாரபாளையம் வட்டார ஜவுளி தொழில் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் - பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் ஜானகிராமன் தலைமை தாங்கினாா். நகரச் செயலாளா்கள் எம்.செல்வம் (திமுக), கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி (அதிமுக), சக்திவேல் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கணேஷ்குமாா் (இந்திய கம்யூனிஸ்ட்), ஒருங்கிணைப்பாளா்கள் கே.எஸ்.அங்கப்பன், ஆா்.பிரகாஷ், பி.சண்முகம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க மூலப்பொருளான பஞ்சு, நூல் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்; மத்திய அரசின் அத்தியாவசிய பட்டியலில் பருத்தி, நூல் ஆகியவற்றை சோ்க்க வேண்டும். நாள்தோறும் உயா்ந்து வரும் நூல் விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும்; விசைத்தறி, கைத்தறி, நாடா உற்பத்தி, பட்டுக் கயிறு, ஆயத்த ஆடைகள் போன்ற சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பருத்தி கழகம் அமைக்க வேண்டும்; இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளா்கள், உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சிஐடியூ நகரச் செயலாளா் கே.பாலுசாமி, ஏஐடியூசி மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணி, ஹெச்எம்எஸ் நிா்வாகி செல்வராஜ், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட அமைப்பாளா் நா.ஆறுமுகம், எல்பிஎஃப் மாவட்டத் தலைவா் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

விசைத்தறியாளா்களின் போராட்டத்தை முன்னிட்டு பிரதான வீதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ஆம் தேதி வரை ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் விசைத்தறிக் கூட உரிமையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT