நாமக்கல்

நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்தில் தவித்த குழந்தைகள், அதிகாரிகள்: பூட்டுப் போட்ட ஊழியரால் பரபரப்பு

5th May 2022 02:00 PM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் அதிகாரிகளையும், குழந்தைகளையும் அங்கு பணியாற்றும் ஊழியர் பூட்டி வைத்தார். இதுகுறித்த தகவலறிந்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நேரில் வந்து மீட்டார்.

நாமக்கல் நகராட்சி லக்கம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை படித்தும், உணவருந்தி விட்டும் செல்வார்கள். இங்கு அமைப்பாளராக சசிகலா என்பவர் பணியாற்றுகிறார். உதவியாளர் பணியிடம் சில ஆண்டுகளாக காலியாக உள்ளது. 

இந்த நிலையில் வியாழக்கிழமை அங்கன்வாடி மையத்திற்கு ஆய்வுக்கு வந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் வித்யாலட்சுமி மற்றும் மேற்பார்வையாளர் ஒருவரையும், 10க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் அங்கன்வாடி மையத்தில் வைத்து அமைப்பாளர் சசிகலா பூட்டு போட்டு பூட்டினார். 

ADVERTISEMENT

இது பற்றிய தகவல் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா தேவிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் சக ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட மையத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளும், அலுவலர்களும் மீட்கப்பட்டனர். 

இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர் சசிகலா கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை. பெற்றோர் கூறியதன் அடிப்படையில் அதிகாரிகளை, குழந்தைகளை மையத்திற்குள் வைத்து பூட்டினேன். உடனடியாக உதவியாளர் பணியிடம் நியமிக்கப்பட வேண்டும், சுற்றுப்புற வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி கூறியதாவது: மாற்றுப்பணி மூலம் உதவியாளர் நியமித்தால் அதை தடுப்பதை அமைப்பாளர் சசிகலா வாடிக்கையாக கொண்டுள்ளார். குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் தடை ஏற்படுத்துகிறார். ஆய்வுக்கு சென்ற எங்களுடைய வட்டார அலுவலர்,  மேற்பார்வையாளரை, குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார். தகவலறிந்து சென்ற நான் அவர்களை மீட்டு வந்தேன். அங்கன்வாடி அமைப்பாளர் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்றார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT