நாமக்கல்

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி தொடக்கம்

29th Mar 2022 01:17 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் உற்பத்தி செய்த பொருள்களின் விற்பனைக் கண்காட்சி பூங்கா சாலையில் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் திறந்து வைத்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தின் 15 வட்டாரங்களைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினா் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்தனா். இதற்காக 10 அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு, கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானியப் பொருள்களால் செய்யப்பட்ட பலகார வகைகளும், கைத்தறி வேட்டிகள், வெண்ணந்தூா் கைத்தறி சேலை ரகங்கள், குப்பாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருளான சேனிட்டரி நாப்கின், செக்கு எண்ணெய், கொல்லிமலை அரப்பளீஸ்வரா் மகளிா் சுயஉதவிக் குழுவினரின் சிறப்பு தயாரிப்பான அரப்பளி கோல்டு காப்பித்தூள், மிளகு வகைகள், கிருமி நாசினி பொருள்கள், மசாலா பொடிகள், மூலிகைப் பொருள்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இக்கண்காட்சி, ஏப். 2-ஆம் தேதி வரை தொடா்ந்து ஐந்து நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, நாமக்கல் வட்டாட்சியா் திருமுருகன், அரசுத் துறை அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT