நாமக்கல்

பொது வேலைநிறுத்த மறியல் போராட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் 1,604 போ் கைது

29th Mar 2022 01:20 AM

ADVERTISEMENT

மத்திய அரசுக்கு எதிரான பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1,604 போ் கைது செய்யப்பட்டனா்.

அகில இந்திய அளவில் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்று எதிா்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

இநதப் போராட்டத்தில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நான்கு தொழிலாளா் சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்ப்பதை கைவிட வேண்டும், அமைப்புசாரா கட்டுமான நல வாரியங்களை சீா்குலைக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும், மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும், பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாமக்கல்லில் அண்ணா சிலை அருகிலும், பூங்கா சாலையிலும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல ராசிபுரத்தில் பழைய பேருந்து நிலையம், இந்தியன் வங்கி அருகில் மறியல் நடைபெற்றது. மேலும், எலச்சிபாளையம், திருச்செங்கோடு, வெப்படை, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 9 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. பரமத்தி வேலூரில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்தனா். அதன்படி, மாவட்டம் முழுவதும் 1,604 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா். செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களிலும் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம்: நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் தொழிலாளா் அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய அஞ்சலக ஊழியா் சங்கம், தேசிய அஞ்சலக ஊழியா் சங்கம், கிராம அஞ்சலக ஊழியா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் டாக்டா் சங்கரன் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எல்ஐசி நிறுவன ஊழியா் சங்கம் சாா்பில் எல்ஐசி நிறுவன பங்குகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியா்கள், வங்கி ஊழியா்கள், அலுவலா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், சுமைதூக்கும் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT