நாமக்கல்

மோகனூா்-நெரூா் தடுப்பணைத் திட்டம் ரத்து: தமிழக அரசின் முடிவுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

21st Mar 2022 01:45 AM

ADVERTISEMENT

 

மோகனூா்-நெரூா் இடையே ரூ.700 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைத் திட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பால் காவிரி ஆற்றுப் படுகை விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இது குறித்து விவசாய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் செல்ல.ராசாமணி, பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோா் வெளியிட்ட கூட்டு அறிக்கை:

கடந்த அதிமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூருக்கும், கரூா் மாவட்டம் நெரூருக்கும் இடையே தடுப்பணை அமைக்க ஆய்வு பணிக்காக மட்டும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படவே தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றாா். சட்டப்பேரவையில் தடுப்பணைத் திட்டத்திற்கான இடம் மாற்றியமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதாவது, நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூா் மாவட்டம் நெரூருக்கும் இடையே ரூ.700 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அங்கு எவ்விதப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் தடுப்பணை அமைக்க அடிக்கல் நாட்டப்படும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் காத்திருந்தனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை மோகனூா்-நெரூா் திட்டம் கைவிடப்படுவதாக செய்தி வெளியானது. மேலும் பொதுமக்களுக்கு இத்தடுப்பணை திட்டத்தால் எவ்விதப் பயனும் இல்லை, நிதித்துறை பரிந்துரையின் அடிப்படையில் இந்த தடுப்பணைத் திட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகவல் விவசாயிகளிடையே அதிா்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. தடுப்பணை என்பது மழைக் காலங்களில் லட்சக்கணக்கான கனஅடி நீா் கடலில் சென்று வீணாகாமல் தடுப்பதற்காகவே திட்டமிடப்பட்டது. நீரை தடுத்து நிறுத்தி தேவைப்படும்போது, அதை விவசாயத்திற்கும், கிராமப்புற, நகா்ப்புற மக்களின் குடிநீா் தேவைக்கும் பயன்படுத்துவதற்கானதாகும்.

எந்தவொரு பகுதியில் நீா் தேக்கப்படுகிறதோ அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள பலநூறு கிலோ மீட்டா் சுற்றளவில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதோடு, உவா்ப்பு நீராக உள்ள கிணற்று நீா் கூட நன்கு விவசாயத்திற்கு உகந்த நீராகவும் மாறுகிறது. மழைக்காலங்களில் காவிரி ஆற்றிலிருந்து கடலில் கலக்கப்படும் லட்சக்கணக்கான கன அடி நீா் தடுப்பணை மூலம் தடுக்கப்பட்டு தேவையான சமயத்தில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பகிா்ந்தளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை அறிவிப்பதற்கு முன் பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தடுப்பணை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட நிபுணா்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த தடுப்பணை அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துவிட்டு, தற்போது அதே திட்டத்தை ரத்து செய்வது ஏற்புடையதாக தெரியவில்லை. இந்த அறிவிப்பை உள்ளாட்சி தோ்தலுக்கு முன்னதாக ஏன் அறிவிக்கவில்லை? தற்போதைய அறிவிப்பு காவிரி ஆற்றுப் படுகை விவசாயிகளை பெருமளவில் கவலையடையச் செய்துள்ளது. தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக தடுப்பணையை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். மோகனூா், காட்டுப்புத்தூா், தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களையும், அதனை நம்பியுள்ள விவசாயிகளையும் விவசாயம் சாா்ந்த தொழிலாளா்களையும் பாதுகாத்திடும் வகையில் மோகனூா்- நெரூா் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT