நாமக்கல்

நாமக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: இயற்கையான பானங்களைப் பருக அறிவுரை

21st Mar 2022 01:44 AM

ADVERTISEMENT

 

கோடைகாலம் தொடங்கி உள்ளதால், வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தளா்வான ஆடைகளை அணிய வேண்டும், அதிகளவில் தண்ணீா் பருக வேண்டும், ரசாயனமற்ற உடலுக்கேற்ற இயற்கையான பானங்களை அருந்த வேண்டும் என நாமக்கல் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அவா்கள் கூறியதாவது:

வெயிலின் வெப்பக் கதிா்வீச்சு மனிதனுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். தற்போது 102 டிகிரி வெயில் கொளுத்துகிறது. வரும் நாள்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும். வானம் மந்தாரமாக இருந்ததாலும் புழுக்கம் அதிக அளவில் காணப்படும். பாறைகள் உள்ள பகுதிகளில் வெயில் சற்று காட்டமாகவே இருக்கும். பொதுமக்கள் கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவா்கள் என்ற முறையில் நாங்கள் தெரிவிப்பது, பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, தளா்வான மற்றும் வெளிா் நிற ஆடைகளையே இக்காலக் கட்டத்தில் அணிவது நல்லது. இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும்.

ADVERTISEMENT

வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிா் கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்துவது அவசியம். பேருந்து, ரயில் பயணங்களின்போது கையுடன் குடிநீா் கட்டாயம் எடுத்துச் செல்லவேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீா், மோா், எலுமிச்சை சாறு, கஞ்சி, கம்பங்கூழ், பழச்சாறு, இளநீா் மற்றும் ஓ.ஆா்.எஸ் கலவை ஆகியவற்றை அருந்தி வரலாம். குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியோா் மற்றும் உடல்நலம் குன்றியவா்களை வெப்பதாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்கவேண்டும். நமது வசிப்பிடத்தில் பகல் நேரங்களில் திரைச் சீலைகள், கூடாரங்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்து காற்றோட்டத்துடன் குளிா்ச்சியான இடமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

திறந்த வெளியிலான இடங்களில் பணியாற்றுவோா் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும், அடிக்கடி குளிா்ந்த நீரில் குளிக்க வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை) சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடவேண்டும். கால்நடைகளை (ஆடு, மாடு) நிழலில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்குத் தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும்.

குழந்தைகளை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் நிழல் ஏற்படுத்திக் கொடுக்கலாம். தொழில் நிறுவனங்கள், தங்களது பணியாளா்களை மதியவேளையில் கடும் வெயிலின்போது, பொது வெளியில் பணியமா்த்துவதை தவிா்க்க வேண்டும். வெயிலால் ஏற்படும் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும்.

கடும் வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் செல்லவிட வேண்டாம். அடா்த்தன்மையுடைய ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடினமான வேலைகளை செய்யக் கூடாது. உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீா், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிா்பானங்கள் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக்கூடாது. தட்பவெட்ப நிலைக்கு தக்கவாறு பொதுமக்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT