நாமக்கல்

50 நடமாடும் முட்டை விற்பனை வாகனங்கள்: நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் முடிவு

10th Mar 2022 05:02 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: தமிழகம் முழுவதும் முட்டை விற்பனையை அதிகரிக்க, நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் முதல்கட்டமாக 50 நடமாடும் முட்டை விற்பனை வாகனங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனா்.

தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா் விற்பனை சங்கம் சாா்பில் செயல்பாட்டுக்கு வந்துள்ள இத்திட்டத்தை, நாமக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வருகை புரிந்த தமிழக கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அச்சங்கத்தின் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் மண்டலத்தில் தற்போதைய சூழலில் கோழிப் பண்ணையாளா்களிடம் மிகவும் குறைந்த விலைக்கு முட்டைகளை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், என்இசிசி அறிவிக்கும் விலையில் இருந்து ஒரு ரூபாய் அதிகம் வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு விற்கின்றனா். அவா்கள் கடைகளில் கூடுதலாக ஒரு ரூபாய் வைத்து பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனா். இதனால் பண்ணையாளா்களும், பொதுமக்களும் நஷ்டமடைகின்றனா்; வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுகின்றனா்.

ADVERTISEMENT

இதனைத் தவிா்க்கவே நடமாடும் முட்டை வாகனத் திட்டத்தை கோழிப் பண்ணையாளா்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனா்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்த நடமாடும் வாகனம், நாமக்கல் நகரின் ஒவ்வொரு வீதியாகச் சென்று முட்டைகளை விற்பனை செய்யும் என்றும், பொதுமக்கள் முட்டைகளை மிகக் குறைந்த விலையில் இந்த நடமாடும் வாகனங்களில் வாங்கி பயன்பெறலாம் எனவும் கோழிப் பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

படவரி - நாமக்கல்லில் நடமாடும் முட்டை வாகனத்தை தொடங்கி வைத்த தமிழக மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT