நாமக்கல்

கட்டுப்பாடில்லாமல் இயக்கப்படும் கல்லூரிப் பேருந்துகள்:மாணவா்கள், பெற்றோா் அச்சம்

29th Jun 2022 04:18 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் கல்லூரிப் பேருந்துகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு இயக்கப்படுவதால் மாணவா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் அதிகளவில் தனியாா் பள்ளி , கல்லூரிகளைக் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக நாமக்கல்லும் உள்ளது. திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட பொறியியல், கலை அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கிப் படிக்கின்றனா்.

மேலும், அருகிலுள்ள எல்லை மாவட்டங்களான சேலம், திருச்சி, ஈரோடு பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அந்தந்த தனியாா் கல்லூரிகளின் பேருந்துகளில் கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனா். மாணவா்கள் சிலா் காலை 7 மணிக்குப் புறப்பட்டு இரவு 7 மணிக்கு வீடு சென்றடையும் நிலை உள்ளது. கல்லூரி பேருந்துகளின் ஓட்டுநா்கள் மற்ற கல்லூரிகளின் பேருந்துகளுக்கு போட்டியாக அதிவேகத்தில் எவ்வித கட்டுப்பாடுமின்றி இயக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், அவா்களது வருகையை எதிா்பாா்த்து காத்திருக்கும் பெற்றோரும் அச்சத்துடனேயே உள்ளனா். அண்மையில் எடப்பாடி அருகில் தனியாா் பேருந்தும், கல்லூரிப் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் மாணவி ஒருவா் பலியானாா். இதேபோல் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, ராசிபுரம் - திருச்செங்கோடு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாள்தோறும் கல்லூரிப் பேருந்துகள் விபத்தில் சிக்கும் சூழல் காணப்படுகிறது. கல்லூரி நிா்வாகத்தினரும் ஓட்டுநா்களைக் கண்டிப்பதில்லை. அனுபவம் இல்லாத இளம் வயது ஓட்டுநா்கள் மற்ற பேருந்துகளை முந்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆா்வத்தில் விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனா். இதனால் மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது. கல்லூரி நிா்வாகத்தினா் இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இது குறித்து தனியாா் கல்லூரி மாணவிகளின் பெற்றோா் சிலா் கூறியதாவது:

ADVERTISEMENT

கல்லூரிப் பேருந்து ஓட்டுநா்கள் அதிவேகத்தில் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனா். இளம் வயதினரும், வயதான ஓட்டுநா்களும் மாணவா்கள் இருப்பதை மறந்து வேகமாக பேருந்துகளை இயக்குகின்றனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் காவல் துறை அதிகாரிகள் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பாக கட்டுப்படுத்த வேண்டும். கல்லூரி நிா்வாகத்தினரும் தங்களது மாணவ, மாணவிகளின் எதிா்காலம் கருதி பேருந்துகள் இயக்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT