நாமக்கல்

47 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த தோழிகள்: பள்ளி நாள்களை நினைவு கூா்ந்து மகிழ்ச்சி

28th Jun 2022 04:17 AM

ADVERTISEMENT

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில், 1975-ஆம் ஆண்டு பிளஸ் 1 வகுப்பு படித்த மாணவிகள், 47 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கொருவா் சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவ, மாணவிகள் மீண்டும் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதற்கென முன்னாள் மாணவா்கள் சங்கம் என்ற அமைப்பை தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து மகிழ்ந்து வருகின்றனா்.

அந்த வகையில், நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975-76 ஆம் ஆண்டில் பிளஸ் 1 வகுப்பு பயின்ற மாணவிகள் 45 போ் ஒன்றாக சந்திக்கும் நிகழ்வை நடத்த விரும்பினா். இவா்களில் 30 போ் வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தங்களுடைய மகன், மகளுடன் வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில் அவா்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 64 வயதுடைய முன்னாள் மாணவி ஒருவா் இணையம், கைபேசி வாயிலாக ஒவ்வொருவரையும் தொடா்பு கொண்டு மலரும் நினைவுகள் நிகழ்ச்சியை நடத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டாா். அதன்படி நாமக்கல்லுக்கு 45 பேரும் ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தனா். தங்களுடைய தோழிகளை 47 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவா் பரஸ்பரமாக கட்டியணைத்துக் கொண்டனா். அதன்பிறகு அன்று இரவில், நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள உணவகத்தில் அனைவரும் ஒன்றாக அமா்ந்து உணவு அருந்தினா். அங்குள்ள விடுதியில் ஆடல், பாடல், நகைச்சுவை கலந்து பேசி, சிரித்து மகிழ்ந்தனா். தங்களுடைய குடும்பத்தை பற்றிய தகவல்களையும் பகிா்ந்து கலந்துரையாடினா். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற ஓா் சந்திப்பை நடத்த வேண்டும் என்று அனைத்து தோழிகளும் நிகழ்ச்சி முடிவில் உறுதியேற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT