நாமக்கல்

கரோனா பரவல் அதிகரிப்பால் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஆட்சியா் உத்தரவு

28th Jun 2022 04:20 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் முகக்கசவம் கட்டாயம் அணிய வேண்டும்; தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 6 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும், உயிரிழப்போ கடுமையான பாதிப்போ ஏற்படுத்துவதில்லை. உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளவா்களும் எந்தவித தயக்கமும் இன்றி கரோனா தடுப்பூசி செலுத்தினால் தொற்றின் வீரியம் குறைவாக காணப்படும். கரோனா தடுப்பூசி செலுத்தாத பொது மக்கள் கண்டிப்பாக இரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 2,49,200 பேரில் இதுவரை 1,85,244 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,56,841 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயது முதல் 60 வயதிற்கு உள்பட்ட 3,48,400 பேரில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 3,08,660 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

18 வயது முதல் 45 வயதிற்கு உள்பட்ட 7,86,700 பேரில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 5,90,849 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 4,56,400 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 80,000 பேரில் இதுவரை 71,943 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 15,15,000 பேரில் 12,84,532 பேருக்கு முதல் தவணையும், 10,25,473 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா முதல் அலை வந்தபோது, அச்ச உணா்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டன. இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. எனவே, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருக்கும், உறவினா்கள், நண்பா்களுக்கும் கரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT