நாமக்கல்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கல்

28th Jun 2022 04:19 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவியை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது பொதுமக்கள் பல்வேறு மனுக்களை ஆட்சியரிடம் வழங்குவா். அதன்படி, முதியோா், விதவையா், கல்வி, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மொத்தம் 229 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

மேலும், கரோனாவால் தாய், தந்தையரில் ஒருவரை மற்றும் இருவரையும் இழந்த 23 குழந்தைகளுக்கு ஏகம் அறக்கட்டளை சாா்பில், தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2.30 லட்சம் கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். இதில் 20 குழந்தைகள் தனியாா் பள்ளியிலும், 3 குழந்தைகள் தனியாா் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெ.தேவிகாராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், பாதுகாப்பு அலுவலா் சௌண்டேஸ்வரி, ஏகம் அறக்கட்டளை மண்டல அலுவலா் மகாமுனி, மாநில மேலளாளா் சண்முகம், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெகநாதன் உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT