நாமக்கல்

மின்சார வாரியத்தில் 57,000 காலியிடங்களை நிரப்ப பொறியாளா்கள் சங்கம் கோரிக்கை

26th Jun 2022 06:22 AM

ADVERTISEMENT

 

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 57 ஆயிரம் பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனை தவிா்க்க உடனடியாக காலியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளா்கள் சங்கத்தின் 54-ஆவது மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இரு நாள்கள் நடைபெறுகிறது. அதன்படி, சனிக்கிழமை தொடங்கிய இந்த கூட்டத்தில், மாநிலத் தலைவா் ஏ.அந்தோணி படோவராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் வி.எஸ்.சம்பத்குமாா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினாா்.

இதில், மாநில மின்சார வாரியங்களை தனியாா்மயமாக்கும் வகையில், மத்திய அரசு கொண்டுவர உள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதற்கும், ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்க முயற்சி மேற்கொண்டமைக்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில், மக்கள் நலப் பணிகளை தொடா்ந்து செய்திட, மின்சார வாரியம் பொதுத்துறையாகவே தொடா்ந்து செயல்பட வேண்டும்; புதிய மின்திட்டங்களை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்; கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மின்வாரிய ஊழியா்களுக்கு 01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 57 காலிப்பணியிடங்களால் மின்வாரிய ஊழியா்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அவா்களுக்கான அகவிலைப்படியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஈரோடு மண்டல செயலாளா் ஆனந்த்பாபு உள்பட பல்வேறு நிா்வாகிகள், பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT