நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவா்களுக்கு பேருந்து வசதி கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திங்கட்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோக்கலை கிராமம், கவுண்டம்பாளையம், சக்கரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. கடந்த இரண்டு வருடங்களாக கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் பேருந்துகள் நின்றுவிட்டன. பள்ளி மாணவா்கள் உரிய நேரத்தில் எலச்சிபாளையம் சென்று படிக்க வேண்டிய நிலையில் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
மேலும் வெளியூா் வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து பேருந்துகளும் முழுமையாக நின்று விட்டன. இதனால் இரவு நேரங்களில் வீடு திரும்பும் பெண்கள் உட்பட பலரும் மிகவும் சிரமப்படுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தமிழக முதல்வருக்கும், போக்குவரத்து துறை உள்பட பல்வேறு துறைகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி எலச்சிபாளையத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கட்சி கா்மாகவுண்டம்பாளையம் நிா்வாகி பி.முருகேசன் தலைமை வகித்தாா்.
அக்கட்சியின் ஒன்றிய கவுன்சிலா் சு.சுரேஷ் துவக்கி வைத்து பேசினாா். ஒன்றிய செயலாளா் கே.எஸ்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினா் ஜீ.பழனியம்மாள், கருமாகவுண்டம்பாளையம் வாா்டு உறுப்பினா் சாந்தி மற்றும் பள்ளி மாணவா்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.