தமிழகத்தில் கூடுதலாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் மன்றம் தொடக்க விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:
கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும் என விரும்பினாா். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 34 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 70 கல்லூரிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. காஞ்சிபுரம், பெரம்பலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த 6 கல்லூரிகளிலும் அமையும் பட்சத்தில் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும். புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1450 மாணவா்கள் ஓராண்டில் இருந்து வெளியே செல்வா். இவை தவிர மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் தலா 50 மாணவா்கள் சோ்க்கை என மொத்தமாக 1,550 போ் மருத்துவம் படித்து வெளியே செல்வா். தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து சென்னை, மதுரை தற்போது நாமக்கல் போதமலையில் செவ்வாய்க்கிழமை 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன. இன்னுயிா் காப்போம் திட்டத்தில் 80 ஆயிரம் போ் உடனடி மருத்துவ சிகிச்சையால் குணமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இரு இடங்களிலும் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படும். இதற்கான நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 9 கோடி ஆகும். மேலும் நாமக்கல் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியை சுற்றிலும் சுற்றுச்சுவா் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீட் தோ்வு வருவதற்கு முன் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெற்ற 28 பேரை இன்னும் ஒருசில தினங்களில் முதல்வரிடம் நேரடியாக அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைக்க உள்ளோம். இதற்கான ஒவ்வொரு மருத்துவ கல்லூரியில் இருந்தும் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.