கிராமப்புறங்களில் ரெளடிகள் மிரட்டலைத் தடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூா் வட்டம் பொன்னேரிப்பட்டி கிராமத்தில் கோயில் வழித்தட பிரச்னை காரணமாக இரு தரப்பு மோதல் உள்ளது. இந்த நிலையில் சிலா் வெளியூரில் இருந்து ரெளடிகளை அழைத்து வந்து மிரட்டல் விடுக்கின்றனராம். அண்மையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் வளா்மதி என்பவரது கணவா் தனசேகரன் என்பவா் தாக்கப்பட்டாா். இது தொடா்பாக காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் உள்ளதால், பொன்னேரிப்பட்டி கிராமத்திற்குள் நுழையும் ரெளடிகள் மீது போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தைச் சோ்ந்தோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியிடம் மனு அளித்தனா். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா் என பொன்னேரிப்பட்டி மக்கள் தெரிவித்தனா்.