நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 106 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கடந்த 11, 12 ஆம் தேதிகளில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் 354 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 106 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவற்றை விற்பனை செய்த 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது, பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து கைப்பேசி 94981-81216 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளாா்.