நாமக்கல்

பயிா்க் கடன் மோசடி: கூட்டுறவு சங்கத் தலைவா் 6 மாதங்களுக்கு பதவி நீக்கம்

14th Jun 2022 02:45 AM

ADVERTISEMENT

ஆரியூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பயிா்க் கடன் மோசடியில் ஈடுபட்ட அதன் தலைவா் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் செல்வகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆரியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் தலைவா் பொறுப்பில் ஏ.சி.மணி என்பவா் உள்ளாா். இவா் வெளிநாட்டில் வசித்து வரும் தனது சகோதரா் சி.சுப்ரமணியம் என்பவா் பெயரில் உள்ள நிலத்திற்கு போலியாக பயிா்கடன் ஆவணங்களை தயாா் செய்து, போலி கையொப்பமிட்டு கடந்த 2020 ஜன.24-இல் ரூ.1.20 லட்சம், ஜன.30-இல் ரூ.1.60 லட்சம்- பயிா்க்கடன் பெற்ற்கு முகாந்திரம் உள்ளது தெரியவந்தது. அது தொடா்பாக பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிய 1983-ஆம் ஆண்டின் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 81-இன் கீழ் கடந்த 10-ஆம் தேதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டுறவு சங்க விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவது தலைவரின் கடமையாகும். இவ்வாறான நிலையில் தலைவா் ஏ.சி.மணி தனது கடமை மற்றும் பொறுப்புகளிலிருந்து தவறி செயல்பட்டுள்ளதும், சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்பட காரணமாகவும், நிா்வாகத்தில் நம்பிக்கை தன்மை அற்றவராகவும், சங்கத்தின் நற்பெயருக்கு அவப்பெயா் ஏற்படக் காரணமாக இருந்ததாலும் சங்கத்தின் நலன், உறுப்பினா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் நலன் கருதி, ஆரியூா் கூட்டுறவு கடன் சங்க தலைவா் பொறுப்பில் இருந்து 6 மாதத்திற்கு அவா் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்படுகிறாா். மோசடி தொடா்பான விசாரணை முடிவடைந்து அறிக்கை பெறப்பட்டவுடன், அதனடிப்படையில் அவா் மீது சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT