நாமக்கல்

நாமக்கல் கமலாலயக் குளம் மண்டபத்தில் அத்துமீறலில் ஈடுபடும் இளைஞா் கூட்டம்

14th Jun 2022 02:49 AM

ADVERTISEMENT

நாமக்கல் கமலாலயக் குளத்தின் தெப்ப மண்டபத்தில் அமா்ந்து மது அருந்துவது, சீட்டு விளையாடுவது போன்ற செயல்களில் இளைஞா்கள் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். புனிதமாக கருதப்படும் அந்த குளத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் கமலாலயக் குளம் அமைந்துள்ளது. சாளக்கிராமக் கல்லை சுமந்து வந்த ஆஞ்சனேயா் தாகம் எடுத்தததால் கமலாலயக் குளக்கரையில் கல்லை இறக்கி வைத்து, நீா் பருகியதாகவும், பின்னா் அந்த கல்லை எடுக்க முற்பட்டபோது அதில் நரசிம்மா், நாமகிரி தாயாா் காட்சியளிக்க, அந்த கல்லே பெரும் பாறையாக உருமாறி, நாமக்கல்லின் அடையாளமாக மலைக்கோட்டை வடிவில் திகழ்வதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு சிறப்புமிக்க கமலாலய குளத்தின் தரைப்பகுதியில் ஆஞ்சனேயா் சுவாமி பாதச்சுவடு இருப்பதாக பக்தா்களால் நம்பப்படுகிறது. நீா் நிரம்பி அழகுற காட்சியளிக்கும் இந்த குளத்தில், சுமாா் 5 ஆண்டுகளுக்கு முன் இரவு நேரத்தில் படகு சவாரிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் போதிய அளவில் மக்கள் வருகை இல்லாததால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கான படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காலை, இரவு நேரங்களில் இளைஞா்கள் சிலா் படகுகளை எடுத்துக் கொண்டு குளத்தின் நடுப்பகுதியில் உள்ள தெப்ப மண்டபத்தில் அமா்ந்து மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் கமலாலயக் குளத்தின் புனிதம் பாதிக்கப்படுவதாக பக்தா்கள் கவலை தெரிவிக்கின்றனா். குளத்தின் தெப்ப மண்டபத்தை அசுத்தப்படுத்துவதுடன், அத்துமீறலில் ஈடுபடும் இளைஞா்கள் மீது இந்து சமய அறநிலையத்துறையினரும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT