நாமக்கல்

திருச்செங்கோட்டில் கண்ணகி விழா: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

14th Jun 2022 02:48 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் திருக்கோயில் வைகாசி விசாக தோ்த்திருவிழாவை முன்னிட்டு, 65-ஆவது ஆண்டாக நடைபெறும் கண்ணகி விழா கைலாசநாதா் கோயில் சொக்கப்ப முதலியாா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழா திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமையிலும், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவில் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசியது:

65 ஆண்டுகளாக, திருச்செங்கோடு தோ்த் திருவிழாவின்போது நடத்தப்பட்டுவரும் கண்ணகி விழாவில் காமராஜா், கருணாநிநி, அரசியல் நிா்ணய சபை உறுப்பினா் டி.எம்.காளியண்ணன், தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் போன்ற சான்றோா்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா்கள் என்பது கண்ணகி விழாவின் பெருமையை தெரிவிக்கும் வகையில் உள்ளது. 

தமிழக முதல்வா் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, வளா்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றை இன்றைய தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில் நினைவு அரங்கங்கள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

அதன்படி தமிழ்நாட்டைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்களின் சிலைகள் அமைக்கப்பட்ட 3 அலங்கார ஊா்திகளை 5 நாட்களுக்குள் செய்தி மக்கள் தொடா்புத்துறை மூலம் அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்கு கொண்டு சென்று இன்றைய இளைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்டத்தில் தமிழக வீரா்களின் பங்களிப்பு பெரிய அளவில் நினைவூட்டப்பட்டது.

சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடி வரும் வேளையில், தமிழக அரசு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரா்களுக்கு பெருமை சோ்த்து வருகிறது. இந்த ஆண்டு முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட திருச்செங்கோடு பகுதியில் கண்ணகிக்கு கோட்டம் அமைக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க உறுதியோற்போம் என்றாா்.

இவ்விழாவில் பரதநாட்டியம், சிவன் திருக்கயிலாய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் அமைச்சா் எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, துணைத்தலைவா் காா்த்திகேயன், கண்ணகி விழாக் குழுவினா், பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT