நாமக்கல் ஆட்சியா் அலுவலக சுவரில் பெரிய அளவிலான தேன்கூடு அமைந்துள்ளதால் ஊழியா்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நான்கு தளங்களைக் கொண்டு செயல்படுகிறது. இந்தக் கட்டடத்தின் வலதுபுற பகுதியில், மாவட்ட வழங்கல் அலுவலா் அறையின் வெளிப்பகுதியில் தேன்கூடு ஒன்று உள்ளது. ஏற்கெனவே இரு முறை அந்தப் பகுதியில் தேன்கூடு இருந்த நிலையில் திடீரென தேனீக்கள் கலைந்து அலுவலக ஊழியா்களையும், பொதுமக்களையும் கடுமையாக தாக்கின.
ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட பகுதியிலேயே தேன்கூடு கட்டுவதும், தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வாடிக்கையாகி உள்ளது. தற்போது மீண்டும் தேன்கூடு உருவாகியுள்ளது. பொதுமக்களை தேனீக்கள் தாக்குவதற்கு முன் தீயணைப்புத் துறையினா் மூலம் தேன்கூட்டை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.