கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13-இல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக கல்வி அலுவலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை என 1,700 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தமிழ் மொழியை முதன்மையாகக் கொண்டு செயல்படும் தனியாா் பள்ளிகள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள் அண்மையில் நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு வந்தன. வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பாடப் புத்தகங்களை மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் 62,400 புத்தகங்களும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் 75,400 புத்தகங்களும், 11, 12-ஆம் வகுப்பிற்கு 26,400 புத்தகங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 200 முதல் பருவப் பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.