நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், கல்வி பயிலும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், 2022-2023ஆம் நிதியாண்டிற்கு, அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்கு தகுதியான மாற்றுத் திறனாளிகள் மாணவா்கள் விண்ணப்பங்களுடன், தங்களது மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையின் அனைத்துப் பக்கங்களின் நகல், ஆதாா் அட்டை நகல், கடந்த ஆண்டு தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுத் திறனாளிக்கான ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், படிப்புச் சான்று உண்மை நகல், தெளிவான வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகிய அனைத்து ஆவணங்களுடன், சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளின் பெயா் விவரங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.