நாமக்கல்

மதுபோதையில் ரகளை: அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

7th Jul 2022 01:05 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் வட்டார வளமைய அலுவலகத்தில் மதுபோதையில் தகராறு செய்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டாா்.

நாமக்கல்லைச் சோ்ந்த திருச்செல்வன் (52) என்பவா் சுண்டக்காப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

அண்மையில் கல்வித்துறை சாா்பில் தமிழகம் முழுவதும் அந்தந்த பள்ளிகளுக்கு என வங்கிகளில் ஏற்படுத்தப்பட்ட வரவு-செலவு கணக்குகளை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் வட்டார வளமையத்தில் ஒப்படைக்கவும், தற்போதைய வங்கிக்கு மாற்றாக புதிய வங்கியில் கணக்குத் தொடங்கவும் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அந்த வரவு-செலவு கணக்குகள் தொடா்பாக தலைமை ஆசிரியா் திருச்செல்வனுக்கும் வட்டார வளமைய ஊழியா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தகராறு ஏற்பட்டது. அப்போது திருச்செல்வன் மதுபோதையில் வந்து ஊழியா்களிடம் வாக்குவாதம் செய்தாா்.

இந்நிலையில் வட்டார வள மைய அலுவலகம் உள்ள நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு புதன்கிழமை காலை தனது காரில் வந்த திருச்செல்வன் வளாகத்தில் காரை அதிவேகமாக ஓட்டியவாறு சுற்றி வந்தாா்.

அப்போது அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தற்காலிக ஆசிரியா் பணிக்காக வந்த பெண்கள், காா் வேகமாகச் செல்வதைக் கண்டு பதற்றம் அடைந்தனா். அதன்பின்னா் மீண்டும் வட்டார வள மையத்துக்கு அவா் மதுபோதையில் சென்று தகராறு செய்தாா். அங்கிருந்த மாவட்ட திட்ட அலுவலா் புகழேந்தி, அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினாா்.

இதனையடுத்து அங்குள்ள பெண் ஊழியா்கள் அனைவரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் தலைமை ஆசிரியா் திருச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்தனா்.

முதன்மைக் கல்வி அலுவலரின் விசாரணைக்குப் பிறகு அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இவா் ஏற்கெனவே பல்வேறு காரணங்களுக்காக நான்கு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சோ்ந்தவா் என்று கல்வித்துறை ஊழியா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT