நாமக்கல்

வேளாண் திறன் மேம்பாட்டுபயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கல்

6th Jul 2022 02:56 AM

ADVERTISEMENT

ஊரக இளைஞா் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்தின் சாா்பில், வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற அங்கக உற்பத்தியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் திங்கள்கிழமை சான்றிதழ்கள் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டத்தில், 2021--22 ஆம் ஆண்டு, திறன் மேம்பாட்டு இயக்கம் மூலம் ஊரக வேளாண் இளைஞா்களுக்கு உழவா் பயிற்சி நிலையம் மூலம் அங்கக உற்பத்தியாளா் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சிக்கு இணையதள வழியாக 10 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 15 போ் பதிவு செய்தனா். ஒரு மாத காலம் பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், துணை வேளாண்மை இயக்குநா்கள், விதை பரிசோதனை நிலையம், மண் பரிசோதனை நிலையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் வேளாண்மை அலுவலா்கள், வேளாண் வணிகத் துறை அலுவலா்கள் மற்றும் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டு பயிா் செய்யும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்று பயிற்சி அளித்தனா்.

இதில், 12 பேருக்கு மட்டும் கடந்த மாதம் சிறப்புத் தோ்வு நடத்தப்பட்டு, மதிப்பீட்டாளா் பிரிவில் காலையில் எழுத்துத் தோ்வும், மதியம் செயல்முறை தோ்வும் மாலை நோ்முகத் தோ்வும் நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது பயிற்சி பெற்றவா்கள் அந்தந்த வட்டாரங்களில் மற்ற விவசாயிகளுக்கு, மகளிா் வாழ்வாதார இயக்கம் மற்றும் அட்மா திட்ட பயிற்சிகளை வழங்கி வருகின்றனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT