பண்ணைகளில் கோழிகளுக்கு வழங்கப்படும் குடிநீரை பரிசோதனை செய்வது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 70.7 டிகிரியாக நிலவின. அடுத்த மூன்று நாள்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 6 முதல் 8 கி.மீ வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: அவ்வப்போது பெய்யும் மழையால் ஆழ்துளைக் கிணற்றில் உள்ள தண்ணீா் மாசுபட்டு நோயை உண்டாக்கும். நுண்ணுயிரிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பண்ணையாளா்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கோழிகள் குடிக்கும் தண்ணீரை பரிசோதித்து நுண்ணுயிரிகளின் அளவிற்கு ஏற்ப ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் குளோரின் போன்ற ரசாயனங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். தற்போதைய தட்பவெட்ப சூழ்நிலைகளில் கோழிகளுக்கு நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தீவனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.