நாமக்கல்

காசநோய் தொற்று 20 சதவீதம் குறைப்பு: நாமக்கல் மாவட்டத்திற்கு முதல்வா் பாராட்டு

5th Jul 2022 03:04 AM

ADVERTISEMENT

காசநோய் தொற்றை 20 சதவீதம் குறைத்ததற்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு முதல்வரால் வழங்கப்பட்ட பதக்கம், பாராட்டு சான்றிதழை, ஆட்சியரிடம் வழங்கி திங்கள்கிழமை அதிகாரிகள் வாழ்த்து பெற்றனா்.

காசநோய் இல்லா தமிழ்நாடு-2025 என்ற இலக்கை அடைவதற்கு, நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்புத் திட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய காசநோய் பிரிவானது 2015 முதல் 2021 வரையில், மாவட்ட அளவில் காசநோய் தொற்று பணிகளை ஆய்வு செய்தது. இதில், 20 சதவீதம் நோய் தொற்று குறைந்துள்ளதற்காக மத்திய அரசால் வெண்கல பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் இம்மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் நாமக்கல் மாவட்டத்திற்கான பாராட்டுச் சான்றிதழை, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (காசநோய்) ஆா்.வாசுதேவனிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். மேலும், காசநோய் கண்டுபிடிப்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு அதிநவீன நடமாடும் வாகனம் முதல்வரால் நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. முதல்வரால் வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம், காசநோய் பிரிவு துணை இயக்குநா் ஆா்.வாசுதேவன் வழங்கி வாழ்த்து பெற்றாா். அப்போது, காசநோய் பிரிவு மருத்துவப் பணியாளா்களும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT