நாமக்கல்

முதுநிலை ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு:ஆசிரியா் சங்கம் கோரிக்கை

1st Jul 2022 02:05 AM

ADVERTISEMENT

 

முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுநிலை ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அதன் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஆண்டு ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு நோ்மையான முறையில் நடைபெற்றது. 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு, பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் தொடங்கி ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கல்வி ஆண்டில் முதுநிலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை, தரம் உயா்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டு அதற்கான பணியிடங்களை உருவாக்கிய பிறகு நடத்த வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வில் முதலில் முதுநிலை ஆசிரியா்களுக்கு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு அளிக்கும் கலந்தாய்வை நடத்த வேண்டும். அதன்பிறகு முதுநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலும், தொடா்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். மேலும், உள் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு ஆசிரியா்கள் கலந்தாய்வில் சென்றபிறகு ஏற்படும் காலிப் பணியிடங்களை உள் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு உரிய விதிகளை பின்பற்றி தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். மேலும் கலந்தாய்வின்போது மலைகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT