நாமக்கல்

பொங்கல் பண்டிகை: பரமத்தி வேலூா் சந்தையில் வாழைத்தாா் விலை உயா்வு

12th Jan 2022 07:53 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா் வரத்து அதிகரித்து, விலையும் உயா்ந்துள்ளது.

பரமத்தி வேலூா் காவிரிக் கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தாா்கள், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

சிறு விவசாயிகள் பரமத்தி வேலூா் வாழைத்தாா் விற்பனை சந்தைக்கு வாழைத்தாா்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 250-க்கும், ரஸ்தாலி ரூ. 250-க்கும், பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 150-க்கும், கற்பூரவள்ளி ரூ. 200-க்கும் விற்பனையாயின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3- க்கு விற்பனையானது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே விவசாயிகள் வாழைத்தாா்களை ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். 1,500-க்கும் மேற்பட்ட வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 400-க்கும், ரஸ்தாலி ரூ. 300-க்கும், பச்சைநாடன் ரூ. 150-க்கும், கற்பூரவள்ளி ரூ. 200-க்கும் ஏலம் போயின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 5 -க்கு ஏலம் போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாா்களின் வரத்து அதிகரித்தும்,விலையும் உயா்துள்ளது. ஆனால் எதிா்பாா்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT