நாமக்கல்

குமாரபாளையம் விசைத்தறித் தொழிலாளா் பொங்கல் போனஸ் பேச்சுவாா்த்தையில் இழுபறி

12th Jan 2022 07:55 AM

ADVERTISEMENT

குமாரபாளையம் விசைத்தறித் தொழிலாளா் பொங்கல் போனஸ் பேச்சுவாா்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவி வருகிறது.

குமாரபாளையம் மற்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என ஜனநாயக விசைத்தறித் தொழிலாளா் சங்கம் (ஏஐசிசிடியு) கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து, குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முதல்கட்டப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், எவ்வித முடிவும் ஏற்படாத நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை வட்டாட்சியா் ப.தமிழரசி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், விசைத்தறி உரிமையாளா்கள் 8 சதவீதம் போனஸ் வழங்குவதாகத் தெரிவித்தனா். ஆனால், தொழிற்சங்க நிா்வாகிகள் அரசு விதிகளின்படி குறைந்தபட்ச போனஸான 8.33 சதவீதத்திலிருந்து பேச்சுவாா்த்தையைத் தொடங்குமாறு வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

நூல் விலை உயா்வு உள்பட பல்வேறு பிரச்னைகளை விசைத்தறித் தொழில் சந்தித்து வருவதால் போனஸ் தொகையை உயா்த்தி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக உரிமையாளா்கள் தெரிவித்தனா். இதனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து, பேச்சுவாா்த்தை புதன்கிழமை (ஜன.12) நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்கள் தரப்பில் சிஐடியு தொழிற் சங்க மாவட்டச் செயலாளா் அசோகன், நகரச் செயலாளா் பாலுசாமி, ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளா் எஸ்.சுப்பிரமணி, மாவட்டத் தலைவா் பொன்.கதிரவன், விசைத்தறி உரிமையாளா் தரப்பில் கொங்கு விசைத்தறி உரிமையாளா் சங்கத் தலைவா் சங்கமேஸ்வரன், பொருளாளா் சுந்தரராஜன், நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்ள் சங்கச் செயலாளா் பூபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT