நாமக்கல்

மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயிக்க முத்தரப்புக் கூட்டம் நடத்தக் கோரிக்கை

1st Jan 2022 01:43 AM

ADVERTISEMENT

மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை நிா்ணயிக்க, மாவட்ட ஆட்சியா் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடததப்பட வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், விவசாயிகள் பேசியதாவது:

மரவள்ளிக் கிழங்கு ஒரு டன் ரூ. 550-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகள் அதிக லாபம் பெற வேண்டிய சூழலில், இடைத்தரகா்களால் அவா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மரவள்ளிக்கு விலை நிா்ணயிக்க விவசாயிகள், ஆலை அதிபா்கள், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொள்ளும் வகையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT

கொல்லிமலையில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. அங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க அதிகாரிகள் தடையில்லாச் சான்று வழங்கக் கூடாது. மோகனூா், பரமத்தி வேலூா் பகுதிகளில் ராஜவாய்க்கால் சீரமைப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அந்த வாய்க்காலின் கரைகளில் சாலை அமைக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தடையின்றி பயிா்க்கடன்கள் வழங்க வேண்டும். பெரும்பாலான உர விற்பனை நிலையங்களில் பொட்டாஷ் உரம் கிடைப்பதில்லை. அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்றனா். மேலும் பல விவசாயிகள் தங்களுடைய குறைகளை நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் ஆட்சியரிடம் வழங்கினா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் செல்வக்குமரன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT