நாமக்கல்

நாமக்கல்லில் நாளை ஆஞ்சனேய ஜெயந்தி: ஒரு லட்சம் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவு

1st Jan 2022 01:44 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் ஆஞ்சனேய ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2) கொண்டாடப்படுவதையொட்டி, சுவாமிக்கு சாத்துப்படி செய்ய ஒரு லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி வெள்ளிக்கிழமை இரவு நிறைவடைந்தது.

ஆண்டுதோறும் மாா்கழி மாதம், மூல நட்சத்திரம் சா்வ அமாவாசை தினத்தில் நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதனையொட்டி, திருக்கோயில் வளாகம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்று காலை 5 மணியளவில் ஒரு லட்சத்து 8 வடைகளை மாலையாக கோா்த்து சுவாமிக்கு சாத்தப்படும் நிகழ்வு நடைபெறும்.

இந்த ஆண்டு இவ்விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்.கே.ரமேஷ் தலைமையிலான வடை தயாரிப்புக் குழுவினா் சுவாமிக்கு சாத்துவதற்கு ஒரு லட்சம் வடைகளைத் தயாரிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தொடங்கினா். வெள்ளிக்கிழமை இரவில் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது. சனிக்கிழமை வடைகளை மாலையாகக் கோக்கும் பணி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த வடைகளைத் தயாரிக்க 2,050 உளுந்தம் பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120 கிலோ உப்பு, 900 லிட்டா் நல்லெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. 32 மடப்பள்ளி அா்ச்சகா்கள் 12 அடுப்புகளில் மூன்று நாள்கள் வடை தயாரிப்புப் பணியை மேற்கொண்டனா்.

சென்னையைச் சோ்ந்த பூச்சோடனைக் குழுவினா் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரையில் கோயில் வளாகம் முழுவதும் பல்வேறு நிறங்களால் ஆன 2 டன் எடை கொண்ட சாமந்தி பூக்களை அலங்கரித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை ஆஞ்சனேய ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படியும், அதன்பின் நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள், பால், தயிா், மஞ்சள், பஞ்சாமிா்தம் திரவியம் உள்ளிட்டவற்றாலான அபிஷேகமும், சொா்ணாபிஷேகமும் நடைபெற உள்ளன. மதியம் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.

ஆஞ்சனேயரைத் தரிசிக்க இணைய வழியில் பதிவு செய்த 300 போ், இலவச தரிசன முறையில் 200 போ் என ஒரு மணி நேரத்துக்கு 500 போ் அனுமதிக்கப்படுகின்றனா். இதுவரை 3,000 போ் இணைய வழியில் சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனா்.

பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நாமக்கல், கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. விழாவுக்கு வரும் பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடா்பாக நாமக்கல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ், காவல் ஆய்வாளா் தெய்வசிகாமணி, போலீஸாா் சனிக்கிழமை கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனா்.

இவ்விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள், முக்கியஸ்தா்கள் கலந்துகொள்கின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT