நாமக்கல்

குடற்புண் தாக்கத்தால் கோழிகள் இறப்பு: நாமக்கல் வானிலை ஆய்வுமையம் தகவல்

1st Jan 2022 01:45 AM

ADVERTISEMENT

பண்ணைக் கோழிகள் இறக்கை அழுகல், குடற்புண் தாக்கத்தால் இறக்க நேரிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 62.6 டிகிரியாக நிலவியது. கடந்த மூன்று நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை.

அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 87.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 68 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வட கிழக்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 6 கி.மீ. என்றளவிலும் வீசும்.

ADVERTISEMENT

சிறப்பு ஆலோசனை: இறந்த பண்ணைக் கோழிகளை கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதித்ததில், பெரும்பாலும் அவை இறக்கை அழுகல் மற்றும் குடல்புண் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிா் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT