நாமக்கல்

ரூ.70 கோடியில் அமையும் நாமக்கல் ஆவின் பால்பண்ணை: தேசிய பால்வள வாரியத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

11th Feb 2022 12:32 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் ஆவின் பால் பண்ணை ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுவதையொட்டி, தேசிய பால்வள வாரியத்துடன் அமைச்சா், அதிகாரிகள் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமாா் 2 லட்சம் உற்பத்தியாளா்களிடம் இருந்து, நாள்தோறும் 1.40 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்பிறகு, சேலம் ஆவின் பால் பண்ணைக்கு அனுப்பப்பட்டு, பால் பாக்கெட்டுகளாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகவும் விற்பனைக்காக மீண்டும் நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து பிரிந்து நாமக்கல்லில் ஆவின் நிறுவனம் புதிதாகத் தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில், சேலம் ஆவின் போன்று நாமக்கல்லிலும் பால் பண்ணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல்-மோகனூா் சாலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில் 8 ஏக்கா் பரப்பளவில் ரூ.70 கோடி மதிப்பில் பால் பண்ணை உருவாகிறது. இதற்கான கடனுதவியை தேசிய பால் வள வாரியம் வழங்க உள்ளது.

ADVERTISEMENT

அந்த வாரியத்தின் தென்மண்டல தலைவா் ராஜு மற்றும் அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை நாமக்கல் வந்தனா். அவா்கள் பால்பண்ணை அமைவிடத்தை நேரில் ஆய்வு செய்தனா். அதைத் தொடா்ந்து, தனியாா் நட்சத்திர உணவகத்தில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, ஆவின் நிா்வாக இயக்குநா் பாா்த்தசாரதி ஆகியோருடன் தேசிய பால்வள வாரியத்தினா் ஆலோசனை நடத்தினா். பின்னா், இரு தரப்பிலும் கடனுதவி தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, நாமக்கல் ஆவின் பால் பண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT