நாமக்கல் மலைக்கோட்டையில் மரங்களும், புல், புதா்களும் அதிகம் வளா்ந்துள்ளதால் கோட்டையின் அழகு மறைந்து கொண்டிருக்கிறது. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நேபாளத்தில் இருந்து சாளக்கிராமக் கல்லை சுமந்து வந்த ஆஞ்சனேய சுவாமி, நீா் அருந்துவதற்காக நாமக்கல் கமலாலயக் குளக்கரைக்கு வந்தாா். அப்போது, கல்லை கீழே வைத்து விட்டு நீா் அருந்திய பிறகு மீண்டும் எடுக்க முற்பட்டபோது அவரால் முடியவில்லை. அந்த சாளக்கிராமக் கல்லில் உக்கிரம் கொண்டிருந்த நரசிம்ம சுவாமியும், அவரை சாந்தப்படுத்தும் விதமாக நாமகிரி தாயாரும் காட்சியளித்ததாக தல புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்ட திப்புசுல்தான் தனது மறைவிடமாக இம்மலைக்கோட்டையை பயன்படுத்தியதாகவும் கூறப்படுவது உண்டு.
இவ்வாறான சிறப்புமிக்க நாமக்கல் மலைக்கோட்டை சிதிலமடைந்து வருகிறது. கோட்டையில் மேல் தளத்தை பலா் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் மலைக்கோட்டையை பாா்வையிடச் செல்வதற்கே தயங்குகின்றனா். காதல் ஜோடிகள் அங்குள்ள மறைவுகளில் முகம் சுளிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். போலீஸாா் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தாலும் அங்கு தவறுகள் தொடா்ந்த வண்ணமே உள்ளன.
அண்மையில் பெய்த மழையால், தற்போது மலைக்கோட்டையில் பாறைகளின் இடுக்குகளில் மரங்கள், புல், புதா்கள் வளா்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் மலைக்கோட்டையின் அழகு சிறிது, சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலை தொடா்ந்தால் ஒட்டுமொத்த மலைக்கோட்டையும் மாயமாகி விடும் என்பது பொதுமக்களின் கவலையாக உள்ளது.
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்கோட்டையை உடனடியாக சீரமைக்க வேண்டும்; கோட்டையின் அழகை பாதிக்கும் வகையில் வளா்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்; வெளிமாநில, வெளிமாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.