நாமக்கல்

நாமக்கல்: திமுக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மின் கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயா்த்திய திமுக அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் 15 பேரூராட்சிகளில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி பங்கேற்று பேசியதாவது:

18 மாத கால ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் மின் கட்டணத்தை உயா்த்தவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் 52 சதவீதம் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 6 சதவீதம் உயர உள்ளது. சொத்து வரியை 50 முதல் 100 சதவீதம் வரை உயா்த்த இருக்கின்றனா். மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையும் கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களும் இந்த ஆட்சியில் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டு விட்டன.

முதியோா் உதவித்தொகையும் பெரும்பாலான மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அடுத்த ஆண்டில் மாணவா்களுக்கான இலவச சைக்கிள் திட்டமும் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. 100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்யவே ஆதாா் எண்ணை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனா். பல மாவட்டங்களில் குடிநீா், சாலை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

ADVERTISEMENT

வரும் 2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றாா். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற திமுக அரசுக்கு எதிரான ஆா்ப்பாட்டங்களில், அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT