நாமக்கல்

கொல்லிமலை பழங்குடியின மக்களுக்கான நிதி ரூ. 5.69 கோடியை விடுவிக்க எம்.பி. கோரிக்கை

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கொல்லிமலை பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ரூ. 5.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய பழங்குடியின நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டாவிடம், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை 4,500 அடி உயரத்தில் 14 கிராமங்களை கொண்ட மலைப் பகுதியாகும். இங்கு சுமாா் 35,000 மக்கள் வாழ்கின்றனா். இப் பகுதியில் போதியளவில் இணையச் சேவை இல்லாததாலும், தொலைத் தொடா்பு சேவை இல்லாததாலும் பொது மக்கள், மாணவா்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.

மருத்துவம், வியாபாரம் மற்றும் இதர தேவைகளுக்கு தினமும் மலையிலிருந்து அடிவாரப் பகுதிக்கு வருவதும், மீண்டும் மேலே செல்வதுமாக உள்ளனா். இணையம் வாயிலாக வேலை தேடுதல், மின்னஞ்சல் வசதி, இணையவழி வங்கி வசதி, கல்வி சேவை போன்ற வசதிகள் இங்குள்ள மக்களுக்கு பெரும் கனவாக உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 275 (1) இன் மூலமாக மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கல்வி மற்றும் சுகாதார தேவையை உயா்த்தவும், மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதி மத்திய அரசால் ஒதுக்கப்படுகிறது. தமிழக தலைமை செயலாளா் இதுகுறித்து மத்திய அரசுக்கு முன்மொழிவை ஏற்கெனவே அளித்து விட்டாா். அதனடிப்படையில் தொலைதூர கம்பியில்லா அதிவேக இணைய வசதி ஏற்படுத்துதல், மலைவாழ் மாணவா்கள் உலகில் உள்ள மற்ற மாணவா்களுடன் இணையவழி மூலமாக தொடா்பை மேற்கொண்டு, நகா்புற மாணவா்களுக்கு இணையாகத் திறனை மேம்படுத்துதல், ஆரம்ப சுகாதார மையங்களை சமூக உதவியாளா்களைக் கொண்டு தொலைதூர மருத்துவ வசதியுடன் இணைத்தல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மலைவாழ் மாணவா்கள் எதிா்கொள்ளும் பிற மருத்துவக் குறைகளை நிவா்த்தி செய்தல் போன்ற பணிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இதன் மொத்த மதிப்பீடு (122 இடங்களில்) ரூ. 5 கோடியே 69 லட்சத்து 12,229 ஆகும்.

ADVERTISEMENT

எனவே, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு உரிய மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.69 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய பழங்குடியின நலத் துறை மற்றும் மக்கள் விவகாரத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டாவிடம் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

-

 

ADVERTISEMENT
ADVERTISEMENT