நாமக்கல்

461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு:ஆணையை வழங்கினாா் அமைச்சா் மதிவேந்தன்

8th Dec 2022 01:09 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை அமைச்சா் எம்.மதிவேந்தன் புதன்கிழமை வழங்கினாா்.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் அடிப்படையில், ரூ. 405.90 கோடி செலவில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,644 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதனையடுத்து, 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 105 பகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்டுவதற்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் ரூ. 237.30 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வழங்கினாா். இதில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), நாமக்கல் நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் சீனிவாசன், உதவி பொறியாளா் சங்கீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT