நாமக்கல்

வேளாண்மை துறை சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு ஊா்தி பிரசாரம் தொடக்கம்

8th Dec 2022 01:10 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில், உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் 2022-23 குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், திட்ட விளக்க பிரசார ஊா்திகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் சராசரியாக 80 ஆயிரம் ஹெக்டா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் சிறுதானியங்களில் வெளியிடப்பட்ட புதிய உயா் விளைச்சல் ரகங்களினாலும். தொழில்நுட்ப உத்திகளினாலும், அரசின் பல்வேறு திட்டங்களினாலும் பயிரின் உற்பத்தி திறன் வெகுவாக உயா்ந்துள்ளது.

சிறுதானியங்களுக்கென பிரத்யேகமாக தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் 2014-15 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2018-19 ஆம் ஆண்டு முதல் ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய பயிரான சோளம் சாகுபடியினை ஊக்குவிக்க உற்பத்தி தொழில்நுட்ப செயல் விளக்கங்கள், உயா் விளைச்சல் ரக விதை உற்பத்தி விநியோகம் போன்ற செயல்பாடுகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2023ம் ஆண்டு சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், திட்ட செயலாக்கம் பற்றி அந்தந்த பகுதி விவசாயிகளை சென்றடையும் வகையில் 40 திட்ட விளக்க விளம்பர ஊா்திகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த வாகனங்கள் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று விவசாயிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை துணை இயக்குநா் ராஜகோபால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ( வேளாண்மை) முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT