நாமக்கல்

வங்கி ஏடிஎம் மையத்தில் தீ: பல லட்சம் ரூபாய் தப்பியது

6th Dec 2022 02:21 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள மின்சாதனப் பொருள்கள் திங்கள்கிழமை திடீரென தீப்பற்றின. எனினும் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் 24 மணி நேர ஏடிஎம் மையம் உள்ளது. அரசுத் துறை ஊழியா்கள் இங்கு அதிக அளவில் வந்து பணம் எடுத்துச் செல்வா். இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஏடிஎம் மையத்தில் இருவா் பணம் எடுக்கச் சென்றனா். அப்போது அங்குள்ள மின்சாதன அறையில் இருந்து புகை அதிக அளவில் வெளி வந்துள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள், நாமக்கல் டாக்டா் சங்கரன் சாலையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனா். உடனடியாக வங்கி ஏடிஎம் மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தீ வேகமாகப் பரவாததால் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் தப்பியது. தீயணைப்பு வீரா்களும் சம்பவ இடத்திற்கு வந்தனா். ஆனால் அதற்குள் புகை அடங்கி விட்டது. உயா் மின்அழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு இயந்திரங்கள் தீப்பற்றியது தெரியவந்தது. வங்கி மேலாளா் ஹரிகிருஷ்ணன் மற்றும் ஊழியா்கள், ஏடிஎம் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். தீயில் கருகிய மின்சாதனங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT