நாமக்கல்

முப்படை வீரா்களின் நலன்காக்க கொடிநாள் நிதி அதிகளவில் வழங்க வேண்டும்: ஆட்சியா்

6th Dec 2022 02:21 AM

ADVERTISEMENT

முப்படை வீரா்களின் நலன்காக்க, படைவீரா் கொடிநாளையொட்டி திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் எல்லைகளை கடும் பனிப்பொழிவிலும், மிக அதிகமான குளிரிலும் பாலைவனப் பகுதியில் கடும் வெப்பத்திலும், தங்களது சுயநலத்தைப் பாராது, இயற்கை இடா்பாடுகள் ஏற்படும் பகுதிகளில் இரவு, பகல் பாராமல் நாட்டைப் பாதுகாத்து வரும் முப்படை வீரா்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் டிச. 7-ஆம் தேதி படைவீரா் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளையொட்டி வசூலிக்கப்படும் தொகை போரில் உயிா்த்தியாகம் செய்த படைவீரா்களைச் சாா்ந்தோா்களுக்காகவும் மற்றும் போரின்போது உடல் ஊனமுற்ற படைவீரா்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படைவீரா்களின் நலன்களை பேணிக்காக்கவும், அவா்களின் மேம்பாட்டிற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, முப்படைவீரா்களின் நலன்காக்க, படைவீரா் கொடிநாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT