நாமக்கல் ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் பதுங்கியிருந்த உடும்பை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை லாவகமாக பிடித்து சென்றனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரின் வீடு மற்றும் முகாம் அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை ஆட்சியா் முகாம் அலுவலகத்தின் மதில் சுவரில் உள்ள ஒரு இடைவெளியில் பாம்பு போன்று ஏதோ ஒன்று நெழிவதை கண்டு அங்கிருந்த ஊழியா்கள் அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பந்தப்பட்ட சுவரில் உள்ள இடைவெளியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தபோது சிறிய அளவிலான உடும்பு வெளியே வந்தது. அதனை வீரா்கள் லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்தில் பாம்புகள் பிடிபட்ட நிலையில், தற்போது ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் உடும்பு பிடிபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம் புதா் நிறைந்து காணப்படுவதால் பாம்பு, உடும்பு, கீரி போன்றவை அலுவலகத்திற்குள் நுழைந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைகின்றன. இதனால் ஊழியா்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, புதா் மண்டிய பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அரசு ஊழியா்களின் கோரிக்கை ஆகும்.