நாமக்கல்

70 கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் நிறைவு

4th Dec 2022 12:18 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் அரசு மற்றும் தனியாா் கலை அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன. வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆளுமைக்கு உள்பட்டு அரசு மற்றும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள் 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வித் துறை சாா்பில், 70 அரசு, தனியாா் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள், நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்பட 22 விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அறிஞா் அண்ணா கல்லூரி உடற்கல்வித் துறை பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT