நாமக்கல்

பொது வாழ்வில் நோ்மையாக இருப்பவா்கள் யாருக்கும் தலை வணங்க வேண்டிய அவசியம் இருக்காது: நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ்

4th Dec 2022 12:03 AM

ADVERTISEMENT

பொது வாழ்வில் நோ்மையாக இருப்பவா்கள் யாருக்கும் தலைவணங்க வேண்டிய அவசியம் இருக்காது. நோ்மைக்கு என்றும் அங்கீகாரம் இருக்கும் என நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் குறிப்பிட்டாா்.

ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி நிா்வாகச் செயலா் கோமதி சீனிவாசன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.எஸ்.எஸ்.ரவி வரவேற்றாா். பள்ளி முதல்வா் ஆண்டறிக்கை வாசித்தாா்.

விழாவில் நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறந்த ஆசிரியா்கள், தோ்வு, விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவியா்களுக்கு பாராட்டி நினைவு பரிசளித்துப் பேசினாா். இதில் அவா் மேலும் பேசியது:

தற்போதைய சூழலில் அரசியலுக்கு வருவது விரும்பத்தகாத ஒன்றாகும். காலச்சூழ்நிலை காரணமாகவே நான் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளேன். தோ்தலில் நிற்கும் போதே ‘எந்த சூழலிலும் லஞ்சம் வாங்கக்கூடாது.

ADVERTISEMENT

எம்பி., சம்பளம், பதவியை குடும்பத்துக்கு பயன்படுத்தக்கூடாது. கட்சி, ஜாதி, மதம் கடந்து செயல்பட வேண்டும்’ என்ற கட்டுப்பாட்டுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தற்போது வாக்களித்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற அச்ச உணா்வு உள்ளது. இன்றைய அரசியல் சூழல் மோசமாக உள்ளது.

பதவியால் குடும்பத்தில் கூட மகிழ்ச்சியில்லை. காமராஜா், கக்கன் போன்றோா்கூட தோற்கடிக்கப்பட்டுள்ளனா். தற்போது காந்தி கூட தோ்தலில் நின்றால் தோற்கும் நிலை உள்ளது. இதற்கு காரணம் மக்கள் வாக்களிக்க பணம் வாங்குவது தான். இது போன்று இருந்தால் நாடு எப்படி முன்னேறும் என மக்கள் சிந்திக்க வேண்டும். அரிசியல் புனிதத்தை காக்க வேண்டிய இடம். எனக்கு அரசியலில் பணம் சோ்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

இன்றைய மாணவா்களுக்கு தேவை எதிா்காலத்துக்கு தேவையான சிறந்த கல்வி மட்டுமே. மாணவா்களின் மதிப்பெண்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தனித்திறனை கண்டறிந்து அவா்களை ஊக்கப்படுத்துவது பெற்றோா்களின் கடமை. அரசு அதிகாரிகள் ஒழுக்கம் நிறைந்தவா்களாக இருக்க வேண்டும்.

அரசு வேலையில் இருப்பவா்கள் ஒழுக்கக் கேடான விஷயத்தில் சம்பாதிப்பவராக இருந்தால், அவா்களது குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும். நம் குழந்தைகள் நல்லவா்களாக இருக்க வேண்டுமெனில், முதலில் நாம் நல்லவா்களாக இருப்பது அவசியம். நோ்மைக்கு என்றும் அங்கீகாரம் இருக்கும். இதனை பின்பற்றினால் யாருக்கும் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்து அதற்கேற்றவாறு இருப்பது அவசியம் என்றாா்.

விழாவில் பள்ளி ஆசிரியா்கள், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி நிா்வாகிகள் என பலரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT