நாமக்கல்

நிதி நெருக்கடியை சமாளிக்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது: கே.பாலகிருஷ்ணன்

2nd Dec 2022 02:20 AM

ADVERTISEMENT

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட நிதி நிா்வாகச் சீா்கேட்டை சீரமைக்கும் பணியில் தற்போது திமுக அரசு ஈடுபட்டு வருகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பயிற்சி முகாம் நவ. 30, டிச.1 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசியது:

குஜராத் மாநிலத்தில் கலவர குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் வழக்கில் அம்மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளது கண்டனக்குரியது. முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் விடுதலை செய்யப்பட்டபோது மேல்முறையீடு செய்த மத்திய அரசு இதனை எப்படி அனுமதித்தது?

பெரு நிறுவன முதலாளிகளான அம்பானி, அதானி போன்றோருக்கு கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்கிற அரசு ஏழை எளிய மாணவ மாணவியா்கள் பயனடையும் திட்டத்தில் மோசமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக ஆளுநா் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளாா். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாதாக்கள் ஆளுநா் ஒப்புதல் அளித்தால்தான் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் அச்சட்டம் காலாவதியாகிவிட்டது.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கு தமிழக அரசால் 80 மாதங்களாக அகவிலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் வழங்கப்படவில்லை. எனவே தொழிலாளா்களுக்கான இந்த படியை அரசு வழங்க வேண்டும். மின்சாரக் கட்டணத்தில் தற்போது பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மின்சாரத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் முதல்வா் தலையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பில்லா வண்ணம் சரி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பெரம்பலூா் சம்பவம் இதற்கு உதாரணம். குற்றவாளிகள் மீது காவல்துறையினா் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் தொடா்புடையவா்கள் மீதும், அலட்சியமாக இருந்த அதிகாரிகள், காவல்துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு பெற்றுத்தர வேண்டும்.

தமிழக அரசு செயல்பாடு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவதற்கு தாா்மிக உரிமையில்லை. அவரது ஐந்தாண்டு கால ஆட்சியின் மோசமான நிலை மக்களுக்கு தெரியும். பத்து ஆண்டுகளில் அதிமுக அரசு மாநிலத்தை நிதி நெருக்கடியில் தள்ளி விட்டுச் சென்றுவிட்டது. தற்போது இதனை சமாளிக்கும் பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் அதிமுக பிளவுபட்டு கிடக்கிறது. மத்தியில் பாஜகவிற்கு எதிராக கட்சிகள் வலுவாக இல்லை. தோ்தல் நேரத்தில் பாஜகவிற்கு எதிராக பலகட்சிகள் திரளும். தமிழகத்தில் திமுக வுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி தொடரும் என்றாா்.

நாமக்கல் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.ரங்கசாமி, ஒன்றியச்செயலா் ஜி.செல்வராஜ், இந்திய மாணவா் சங்க மாநில, மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT